சுவிற்ஸர்லாந்தில் புத்தாண்டில் பெரும் தீ விபத்து ; 40ஐ தாண்டிய பலி எண்ணிக்கை


சுவிற்ஸர்லாந்து கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் சுமார் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு நேரப்படி, நேற்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும், இது, பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க முடியாது என புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பல காரணங்களை ஊகிப்பதாக இருப்பினும், பாரில் உள்ள அறையொன்றில் முழுவதுமாக தீப் பிடித்ததே வெடிப்புக்கு காரணமாக இருந்திருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் மீட்புப் படையினர் ஹெலிகொப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக அப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டபோது பாரில் இருந்து ஒரெஞ்ச் நிற தீப்பிழம்புகள் வெளிக்கிளம்பியதை நியூயோர்க்கைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி படம் பிடித்து வெளியிட்டிருந்தார்.

இரவுப் பொழுதில் தீ பரவிய காட்சியும் மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடம் தேடி ஓடுகின்ற காட்சிகளும் அந்நாட்டு ஊடகங்களால் படம் பிடிக்கப்பட்டு, அப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

இத்தீ விபத்தினை நேரடியாக கண்ட 21 வயதுடைய சாமுவேல் ரெப் என்பவர் “மக்கள் அலறிக்கொண்டிருந்தனர். பிறகு பலர் தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் அனேகமாக இறந்து கிடந்தனர்” என்றார்.

விபத்து ஏற்பட்டபோது பாரில் இருந்த இரண்டு இளம் பிரெஞ்ச் பெண்கள், “பிறந்தநாள் மெழுகுவர்த்திகள்” உள்ள போத்தலொன்று மரத்தாலான கூரைக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர், பாரின் அடித்தளப் பகுதியில் தீப்பிடித்ததைத் தாம் கண்டதாகவும் அந்தத் தீ மிக வேகமாக கூரை முழுவதும் பரவியது என்றும் ஊடகமொன்றுக்கு தெரிவித்தனர்.

 

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *