மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பா


மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

அதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சந்தேக நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் ,

அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் ,

மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறைத் தண்டனை பிறப்பிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Visited 3 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *