வளர்ப்பதற்காக தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக தம்பதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (6) மரண தண்டனை விதித்தது.
மாலிகாவத்தை பகுதியை சேர்ந்த தம்பதி 2018 மே 11 அல்லது அதற்கு அருகிலுள்ள நாளில் மாளிகாவத்தை பகுதியில் இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்தார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இரண்டு வயது ஆண் குழந்தையின் உடலை பரிசோதனை இல்லாமல் புதைக்க தயாராக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதாக பொலிஸ் சாட்சியங்களில் தெரியவந்துள்ளது .
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தகவல் தெரிவித்து, குழந்தையின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் சாட்சியங்களில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில், குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட விதம் மருத்துவ சாட்சியங்களில் தெரியவந்துள்ளது என்று நீதிபதி கூறினார்.
குழந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவை தீக்காயங்கள் மற்றும் தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்கள் என்றும் மருத்துவ சாட்சியங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சித்திரவதைக்கு ஆளாகி தீக்காயங்களால் ஏற்பட்ட பல காயங்களால் குழந்தையின் மரணம் ஏற்பட்டதாக மருத்துவ அதிகாரி கண்டறிந்துள்ளார் என தெரிவித்த நீதிபதி , தம்பதிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
