இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார்.
அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.

அதன்பின் குணச்சித்ர நடிகராக மாறிய அவர் சமுத்திரம், அன்னக்கொடி, மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கினார்.
இடையில் தனது அப்பாவின் கிளாசிக் படமான சிவப்பு ரோஜாக்கள் படத்தினை இந்தகாலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய போவதாக அறிவித்தார். அதுதொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு இருந்தார்.
சமீபகாலமாக உடலில் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டது. குறிப்பாக ஓரிரு வாரத்திற்கு முன்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார்.
அதன்பின் உடல்நலம் தேறி வந்தவர் சென்னை, சேத்துபட்டில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென இன்று(மார்ச் 25) மாலை 6 மணிக்கு மனோஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அழைத்து பார்த்துள்ளனர். ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
மலையாள நடிகையான அஸ்வதி என்ற நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோஜ். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
