தி.மு.க. கவுன்சிலரின் பேரன் உட்பட மூன்று இளைஞர்கள் கைது


சென்னையில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், தி.மு.க. கவுன்சிலரின் பேரன் உட்பட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த நிதின் சாய் என்ற மாணவர் உயிரிழந்தார்.

முதலில் இது ஒரு சாதாரண விபத்து என்று கருதப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் காரில் வந்த இளைஞர்கள் வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது.

ஒரு மாணவிக்கும், இரண்டு இளைஞர்களுக்கும் இடையேயான உறவு தொடர்பாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை சமாதானப்படுத்த தி.மு.க. கவுன்சிலரின் பேரனான சந்துரு, ஒரு மாணவர் குழுவை அணுகியுள்ளார்.

சந்துரு உட்பட காரில் இருந்த குழுவினர், இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு குழுவினரை மிரட்ட முயன்றுள்ளனர்.

அப்போது, அவர்களின் முக்கிய இலக்கான வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் ஒரு பைக்கில் வேகமாக சென்றுள்ளனர்.

மற்றோரு பைக்கில் வந்த நிதின் சாய் மற்றும் அபிஷேக் ஆகியோரை ரேஞ்ச் ரோவர் கார் மோதியுள்ளது. இதில், பின்னால் அமர்ந்திருந்த 19 வயது மாணவரான நிதின் சாய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஓட்டி சென்ற அபிஷேக் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறை கொலை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று மாணவர்களைக் கைது செய்துள்ளது. காரில் இருந்த நான்காவது மாணவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அரசியல்ரீதியாக அணுக வேண்டாம் என்று ஆளும் தி.மு.க. கூறியுள்ளது.
“இப்படிப்பட்ட குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இது ஒரு சமூகப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை அல்ல,” என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *