லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக விமான நிலையம் குறிப்பிடத்தக்க மின் தடையை சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையம் இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும். இது ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளைக் கையாளுகிறது.
கடந்த ஆண்டு அதன் முனையங்கள் வழியாக 83.9 மில்லியன் பயணிகள் கடந்து சென்றது சாதனையாகும்.
அதேவேளை மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் சுற்றியுள்ள சொத்துக்களில் இருந்து சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீயை அணைக்க பத்து தீயணைப்பு இயந்திரங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை (LFB) தெரிவித்துள்ளது.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பெரிய அளவிலான மின் தடை காரணமாக 16,300க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளதாக எரிசக்தி விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து சுமார் 200 அழைப்புகள் வந்ததாக LFB தெரிவித்துள்ளது.
