திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை!


காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி மலைப் பாதையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், ஸ்ரீவாரி மெட்டு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது.

குறிப்பாக திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் இரண்டு இடங்களில் பாறை சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏழுமலையான் கோயில் வளாகத்திலும் மழை நீர் தேங்கியது.

கனமழையால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் சாலை அருகே மாலாடிகுண்டம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீவாரி மெட்டு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேபோன்று திருமலை பாபவிநாசனம் தீர்த்தம், ஆகச கங்கா உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியதனால், ஹைதராபாத்தில் இருந்து வந்த ‘‘இண்டிகோ’’ விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

இதேபோன்று, திருப்பதி வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இயக்கப்படும் சில ரயில்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டன. சில ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

Visited 18 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *