அமெரிக்கப் படையினரால் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் நேற்று நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பான மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் அமைந்திருந்தது.
மதுரோ நீதிமன்ற அறைக்குள் நுழையும் முன்னரே, அவரது கால்களில் கட்டப்பட்டிருந்த இரும்பு விலங்குகளின் ஓசை நீதிமன்ற அறை முழுவதும் எதிரொலித்தது.
உள்ளே நுழைந்த மதுரோ, பார்வையாளர் வரிசையில் இருந்த பலரைப் பார்த்துத் தலையசைத்து, ஸ்பானிஷ் மொழியில் ‘புவனோஸ் டயஸ்’ (காலை வணக்கம்) எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.
விசாரணையின் இறுதியில் நீதிமன்றத்தில் ஒரு பதற்றமான சூழல் உருவானது. பார்வையாளர் வரிசையில் இருந்த நபர் ஒருவர், மதுரோவை நோக்கிச் சத்தமாக ஸ்பானிஷ் மொழியில் கத்தத் தொடங்கினார். “நீ செய்த கொடுமைகளுக்கெல்லாம் கண்டிப்பாகப் பலன் அனுபவிப்பாய்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரோ, “நான் கடத்தப்பட்ட ஒரு ஜனாதிபதி, நான் ஒரு போர்க்கைதி” என்று உரக்கக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மதுரோவும் அவரது மனைவியும் பாதுகாப்பு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் பின்பக்கக் கதவு வழியாக மீண்டும் விலங்கிடப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதுரோவை நோக்கிச் சத்தமிட்ட அந்த நபர், நீதிமன்றத்தில் அழுதுகொண்டே காணப்பட்டார். அவர் முன்னதாக வெனிசுவேலா அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் அமைதியைக் குலைத்ததாகக் கூறி அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
