ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை


கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார்.

புத்தல – கதிர்காமம் வீதி, யால தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி யானைகள் நடமாடுகின்றன.

இதன் காரணமாக, குறித்த பாதையில் பயணிப்போர், வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என்றும், யானையைக் கண்டால் எந்த காரணம் கொண்டும் வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அவற்றுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், யானைகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், யானையைக் கண்டவுடன் சத்தம் எழுப்புவதையோ அல்லது அதிக வெளிச்சம் தரும் கேமராக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *