கண்டி, அம்பரப்பொல பகுதியில் நேற்று (11-01-2025) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் பாடசாலை மாணவிகள் இருவர் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, அச்சமடைந்த மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், கடத்தப்பட்ட மாணவியை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்த போதும் அது முடியாமல் போயுள்ளது.
இதேவேளை, கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
