இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட ஹோட்டலொன்றின் முதலாம் மாடியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
தீ விபத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில் 13 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அந்த ஹோட்டலில் 42 அறைகளில் குறைந்தது 88 பேர் தங்கியிருந்ததாகவும் அங்கு 60 ஊழியர்கள் கடமை புரிந்ததாகவும் தெரிவித்துள்ள அந்நாட்டுப் பொலிஸார், தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
