சிறையில் உள்ள பிள்ளையானுக்கு 50…. பொங்கலாம் ….குருதிக்கொடையாம்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஐம்பது பானைகளில் பொங்கல் நிகழ்வு மற்றும் இரத்ததான நிகழ்வும் இன்று 19/08 இடம்பெற்றது.

வாகரை பிரதேச தமிழ் மக்கள், விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பனிச்சங்கேணி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக பூசையினை தொடர்ந்து ஆலய முன்றலில் 50 பானைகள் வைத்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்று ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கல்வி, கலை, பண்பாட்டு பிரிவினால் ‘உயிர் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனியில் வருடா வருடம் நடத்தும் இரத்ததான முகாமிலும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களினால் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் முன்வந்து கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள்.

வாகரை பிரதேச கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்களினால் ஒழுங்கமைப்பட்ட நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் கதிர்காமதம்பி தெய்வேந்திரன், கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதி தலைவர் நா. திரவியம், பொது செயலாளர் பூ. பிரசாந்தன், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்டதாக கூறி பயங்கரவாத விசாரணை பிரினரால் கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இன்றுவரை பயங்கரவாத தடை சட்டத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினால் பாதுகாப்பு அமைச்சின் 90 நாள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Visited 12 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *