அம்பாறை பாடசாலை ஒன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்


அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. அன்றைய தினம் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் தண்ணீர் விசிறி விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு தெரிவித்திருந்தார்.

இதன்படி, மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், பாடசாலை அதிபர் மூன்று பிரம்புகளை எடுத்து, ஒன்பது மாணவர்களையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து, அவர்களின் கைகளைச் சுவரில் வைக்கச் செய்து, மாணவர்களின் முதுகில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட மாணவர்கள் இச்சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் மாணவர்களைப் பரிசோதித்தபோது, தாக்குதலால் ஏற்பட்ட வீக்கமும் வலியுடன் கூடிய காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யத் தயாராக இருந்தபோது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர் குழு, தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது.

எனினும், இன்று சிறுவர் மறுவாழ்வு மையம், அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் இம்மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து எழுத்துமூல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இத்தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *