பொலிஸ் தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான ”கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான ஆயுதங்கள் சிலவற்றை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து வெளியான தகவலினடிப்படையில் எண்டேரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் உள்ள மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் பராமரிப்பில் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், ரி-56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மெகசின்களும், ரி-56 ரக தோட்டாக்கள் 267 ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் எந்தேரமுல்லவிலிருந்து கொழும்பு – கண்டி வீதியில் உள்ள குறுக்கு வீதியில் அமைந்துள்ள தற்காலிக அறை ஒன்றை சோதனையிட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் மற்றும் களனி பொலிஸ் அதிரடிப்படை முகாம் அதிகாரிகளின் உதவியுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
