புத்தளம் – மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 6 பேர் உயிரிழந்து 8 பேர் சுகயீனமுற்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய வென்னுப்புவை பொலிஸாருக்கு அனுமதி அளித்து மாரவில நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (8) உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மாரவில தம்பரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரண்டு பெண்கள் கடந்த 7 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், 47 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடந்த 7 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இரண்டு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
