கண்டியில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கண்டியில் முதலில் கைது செய்யப்பட்ட ரத்வத்த, இன்று (31) மாலை நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒக்டோபர் 26, 2024 அன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
மிரிஹான, எம்புல்தெனிய பிரதேசத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான 3 மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த சொகுசு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையின் போது, ரத்வத்த மற்றும் அவரது மனைவி இருவரும், குறித்த வீட்டில் தனது மாமியார் வசிப்பதாக பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளனர்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரினால் மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த கார் அங்கு கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
