விமானப் பணிப்பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.
மனுதாரரான செவ்வந்தி சேனாதீர என்பவர், சாமிக கருணாரத்னவுடன் தனக்கு இருந்த தொடர்பினால் தமக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை சாமிக்க கருணாரத்னவே தந்தை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
இருப்பினும், இந்த வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சாமிக கருணாரத்னவின் சட்டத்தரணி அசேல ரேகவ, இந்தக் குற்றச்சாட்டுகளைத் தனது சேவைபெறுநர் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், முறைப்பாடு செய்த பெண் அதே காலப்பகுதியில் ஒரு இந்திய நாட்டவருடன் தொடர்பில் இருந்ததாகவும் வாதிட்டு, அதனை நிரூபிக்க படத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அத்துடன், மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு பிரதிவாதிக்கு அல்ல, மாறாக முறைப்பாடு செய்தவருக்கே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வாதங்களை செவிமடுத்த நீதிவான், சாமிக கருணாரத்னவுக்குப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
