வல்வெட்டித்துறையில் புலிகளின் தலைவரின் வீடு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானித்துள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு, அண்மையில் நகர பிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு, காணியின் உரிமையாளரான பிரபாகரனின் சகோதரி ம.ஜெகதீஸ்வரி முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

அதன் போது, உறுப்பினர் மயூரன் கருத்துத் தெரிவிக்கையில்,

சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளராக தலைவர் பிரபாகரனின் சகோதரி உள்ளார். எனினும், அந்தக் காணி ‘பிரபாகரனின் காணி’ என்றே அனைவராலும் அறியப்படுகின்றது.

தலைவர் வாழ்ந்த வீடு இடித்து அகற்றப்பட்டாலும், அந்த வெற்றுக் காணியை பிரபாகரனின் இல்லம் என்றே இன்றும் அழைக்கின்றனர். எனவே, அதன் பழைமை மாறாமல் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.

அங்கு புதிய கட்டுமானங்களை அமைக்கவிடாமல் தடுப்பதற்கு நகரசபைக்கு அதிகாரம் இல்லை. ஆனால், தார்மீக அடிப்படையில் – புதிய கட்டுமானங்களை அமைப்பதைத் தவிர்க்குமாறும், அமைப்பதாயின் பிரபாகரனின் இல்லத்தையொத்த கட்டுமானத்தை அமைக்குமாறும் ஆதனத்தின் உரிமையாளருக்கும், அற்றோனித்தத்துவக் காரருக்கும் கோரிக்கை விடுப்போம். அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் கைகளில் உள்ளது என்றார்.

இந்தக் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு, ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *