தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்டவர் மரணம்


தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை (19) காலமானார்.

பிரித்தானிய நாட்டின் லண்டன் நகரில் இராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார். அவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளது.


இன்றைய தினம் முதல் 22 ஆம் திகதி வரையிலான 3 நாட்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவுள்ளது. இதற்காக, அல்-பக்ரியா மாவட்டத்தில் உள்ள அரண்மனையில் உடல் வைக்கப்படும். ஆண்கள் இரங்கல் தெரிவிக்க செல்ல அனுமதிக்கப்படும். பெண்கள் மக்ரீப் தொழுகையை முடித்து விட்டு இரங்கல் தெரிவிக்க செல்லலாம்.

இவர், சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல்அஜீசின் கொள்ளு பேரனாவார். 1990-ம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி பிறந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு 36-வது வயது பிறந்தது.

உயிர்காக்கும் ஆதரவு சிகிச்சையுடன் இருந்தபோது, சில சமயங்களில் இளவரசரிடம் அசைவு ஏற்பட்டது.

இதனால், இளவரசர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதற்காக அவருடைய தந்தை காத்திருந்தபோதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் அந்நாட்டு மக்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *