திருகோணமலையில் அமைதியின்மை!


திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுத்ததையடுத்து, நேற்று இரவு அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை, 1951 ஆம் ஆண்டு பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பௌத்த விகாரையாகும்.

அங்கு நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிவர்தன தஹம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்ததையடுத்து, அதன் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் தாயக பிரிவினர் தீர்மானித்தனர்.

இதன்படி, நேற்று காலை அடிக்கல் நாட்டப்பட்டு, பிற்பகலுக்குள் அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், இந்த கட்டுமானம் அனுமதியற்றது என கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தேரருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த பின்னணியில், அந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற பொலிஸார் நேற்று இரவு நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, தேரர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு எதிர்ப்புகள் வௌியிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறி விகாராதிபதியும் மற்றுமொரு தேரரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததையடுத்து, சிலையின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Visited 1 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *