தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி என்பவர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஒருங்கிணைப்பு செயலாளராக செயற்பட்டு வந்தவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் நாமல் ராஜபக்ஷவின் உரைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொள்கலன்கள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினை குறித்துக் கிடைக்கும் முறைப்பாடுகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே போன்று போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த முற்பட்டு வருவதாகவும் இந்த போதைப்பொருள் பலவற்றுடன் மொட்டுக் கட்சியின் உறுப்பினர் சம்பத் மனம்பேரி தொடர்பில் இருப்பதும் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் என அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி என்பவர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் ஒருங்கிணைப்பு செயலாளராக செயற்பட்டு வந்தவர் என தெரிவித்த அவர் ,
போதைப்பொருளுடன் தொடர்புடைய பலர் மொட்டுக் கட்சியில் இருப்பதாகவும் அப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதனாலேயே மொட்டுக் கட்சியை மக்கள் விரட்டிவிட்டதாகவும் நாட்டிற்குள் போதைப்பொருளை எடுத்துவருவது யார் என்று நாட்டில் உள்ள மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் நீண்ட காலமாக அரசியல் ஆசிர்வாதத்துடன் பாதாள உலக குழுவை வளர்த்து, அதனை நடத்திச் சென்று, போதைப்பொருளையும் நாட்டிற்குள் எடுத்துவந்து, நாட்டையும் நாசமாக்கி, சிறுவர்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கியுள்ளதாக ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட நாமல் ராஜபக்ஷ, நீங்கள் விசாரணைகளை முன்னெடுங்கள். சம்பத் மனம்பேரி தேர்தலில் போட்டியிட்டார். நீங்கள் தேசிய பட்டியல் உறுப்பினரை மறைத்தது போன்று நாங்கள் மறைக்கப் போவதில்லை.
அவருக்கு இவற்றுடன் தொடர்பு இருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குங்கள். அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் ஏன் செயற்படவில்லை என எனக்கு விளக்கமளியுங்கள் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உங்களைப் போன்று நாங்கள் போதைப்பொருள் வர்த்தகத்தையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் கட்டியணைத்துக் கொண்டிருக்கவில்லை.
நாங்கள் குற்றங்கள் தொடர்பில் செயற்பட்டோமே தவிர ஒவ்வொருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை என ஆனந்த விஜேபால பதிலளித்தார்.
