பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஆயுதங்கள் மீட்பு


பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு, முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் சி.ஐ.டி. யினர் வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் சி.ஐ.டி. யினர் காரியாலயத்தின் நிலத்தை உடைத்து பல மணிநேர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந் நிலையில், அங்கிருந்து 3 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், ஒரு கடவுச்சீட்டு, ஒரு ஐ பேட், கைத்துப்பாக்கி உறை, 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 6, ரிப்பிட்டர் துப்பாக்கியின் 5 வெற்றுத் தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையானது பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரையும் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *